புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை! மக்களின் அச்சம் தேவையற்றது – ஹர்ஷன நாணயக்கார

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில் ஈடுபடும் உரிமையையோ அந்தச் சட்டமூலம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதிய சட்டமூலம் குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டமூலத்தை முறையாக வாசித்துப் புரிந்துகொள்ளாததே இத்தகைய சந்தேகங்களுக்கு முதன்மைக் காரணம். பொறுப்புள்ள அரசுக்குத் தன்னைத்தானே பாதுகாப்பதை விட, ஒட்டுமொத்த தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதே முதன்மையான கடமை.

1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மனித உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததால், அதனை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த மாற்றம் செய்யப்படுகின்றது.

தேசத்தைப் பாதுகாத்தல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அரசமைப்பைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டல் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் ஆகிய 5 முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே புதிய சட்டமூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இராணுவத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதிய சட்டமூலத்தின் 21ஆவது பிரிவின் ஊடாகக் கடற்படை மற்றும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் 24ஆவது பிரிவின் கீழ், பொலிஸார் இல்லாத போது அல்லது பொலிஸாரால் உடனடியாக வருகை தர முடியாத சூழல் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே பாதுகாப்புப் படையினர் சந்தேகநபர்களைக் கைது செய்யும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.

உடனடி பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவும், பொது அமைதியைப் பேணுவதற்காகவும் இராணுவம் அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த அதிகாரம் பயன்படுத்தப்படும்.

கைதுசெய்யப்படும் நபர்களை உடனடியாகப் பொலிஸாரிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலமானது அரசைப் பாதுகாப்பதற்காக அல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே ஆகும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *