நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் இனி கவனமாக இருக்க வேண்டும்! – அமைச்சர் சரத் வீரசேகர

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், ‘நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்கள்’ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இனி நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய சட்டமூலத்தின் ஆங்கில வரைவில் நீண்ட முடியைக் கொண்ட ‘ஆண்கள்’ என்று பிரத்யேகமாகக் குறிப்பிடப்படாமல் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நாட்டில் பாதாள உலகக் கும்பல்களின் மோதல்கள் அதிகரித்து மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகையில், ஓட்டோக்கள் மற்றும் பஸ்களின் அலங்காரப் பொருள்களைக் கழற்றுவது போன்ற சிறிய விடயங்களுக்கே அரசு முன்னுரிமை அளிக்கின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் அமைதியான போராட்டங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசு அமைதியான பேரணிகளையும் பொலிஸாரைப் பயன்படுத்தி முடக்க முயல்கின்றது.

பொலிஸ் சீருடையில் உள்ள தர்ம சக்கரத்தை அகற்றச் சிலர் முயல்வதையும், அமைச்சர்கள் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்திப் பேசுவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசமைப்பின் 9ஆவது பிரிவின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு, விகாரைகளிலிருந்து சிவில் பாதுகாப்புப் படையினரை விலக்கியுள்ளமை பௌத்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மையங்களைச் சிதைத்து, வேறு மத அடையாளங்களாக மாற்றும் முயற்சிகள் நாட்டின் வரலாற்று அடையாளத்தை அழித்துவிடும்.

ஞானசார தேரருக்கு மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தற்போதைய ஜனாதிபதி முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிப் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என உயர்நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அரசு இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *