விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன.
275 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறையானது பூட்டி சீலிடப்பட்டுள்ளது.
அதே போல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் 299 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மையம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிசிடிவிக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனிடையே இரண்டு தொகுதிகளிலும் நான்கடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு மையங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் உட்பட எந்த பொருளையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன. 32 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு துவங்கி 11 மேசைகளில் 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.