இலங்கையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் உள்நாட்டில் இந்த பயங்கரவாதிகளை அழிப்பதால் மாத்திரம், பூகோளரீதியான பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது.
உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களை அழிப்பது அத்தனை சுலபமான விடயமும் இல்லை.
உள்நாட்டில் நாசகார செயல்களை புரிவதற்கான திட்டங்களை வெளிநாடுகளில் இருந்தபடி அவர்கள் மேற்கொள்ளக்கூடும்.
அவர்களை வழிநடத்துகின்ற தலைவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கக்கூடும்.
எனவே அவர்களை அழிப்பதற்கு பூகோளரீதியான முழுமையான ஒத்துழைப்பு அவசியப்படுகிறது.
இலங்கையிலும் இந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதிய சட்டத்திட்டங்கள் இல்லை.
எனவே அதற்கு வழி செய்யும் வகையிலான வலுவான சட்டத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது விசேட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களால், நாட்டின் பொருளாதாரத்திற்கு 1000 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களின் காரணமாக, நாட்டின் சுற்றுலாத் துறை பாரிய அளவில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.