தன்னுடைய கணவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் கொடுமைபடுத்தியதாக சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாக கூறினார்.
மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கும் ஜெயஸ்ரீ, தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார், ஈஸ்வரிடம் விசாரணை நடத்தினர். மனைவியை கொடுமைபடுத்தியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்த நடிகை ஜெயஸ்ரீ மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்.
அதில்,”தன்னுடைய கணவரும், நடிகை மகாலட்சுமியும் என் கண்முன்னால் கொஞ்சி பேசுகிறார்கள். என் கணவர் வெளிநாடுகளில் சூதாட்டமாடுவதையும், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொடுமைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். என்னுடைய குழந்தையிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்தார் எனது கணவர்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் தான் என்னுடைய கணவர் என்னை கொடுமைப்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் பாருங்க :