ஸ்ரீரங்கம் திருக்கோயில்

யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருவரங்கபட்டினம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீரங்கம், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரமாகும். ரங்கநாதர் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஏழு மதில் சுவர்களையும், ஏழு உலகங்கள் என்று கூறுகின்றனர்.

இந்த திருத்தலத்தின் 21 கோபுரங்களில் ஒன்றான இராஜகோபுரமானது, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக, 236 அடி உயரத்துடன், 1 லட்சத்து 28 ஆயிரம் டன் எடையை கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவிலானது, யாரால் கட்டப்பட்டது என்பதை உறுதியாக அறிய முடியாத அளவிற்கு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

9ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரையிலான, 600க்கும் மேற்பட்ட சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. அக்கல்வெட்டுகள், திருவரங்கம் விண்ணகரத்திற்கு, சோழ மன்னர்களும், பெரும்புள்ளிகளும், பல கொடைகளும், உதவிகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.

மேலும் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் உருவங்களானது, தந்தங்களால் செதுக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

சங்கம் மருவிய காலத்திலிருந்தே, ஆழ்வார்கள் திருவரங்கத்தானை போற்றி பாடியுள்ளனர். ஏன்? நாலாயிரய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் கூட நம் ரங்கனாதரைப் பற்றியதுதான்.

ஆழ்வார்கள் கால இறுதியில் வந்த கம்பர், கிபி 14 ஆம் நூற்றாண்டில் தன் ராமாயணத்தை இங்குதான் அரங்கேற்றம் செய்துள்ளார். அந்த இடம், ரங்கநாச்சியார் சன்னதி முன்பு கம்ப மண்டபம் என பெயரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், 700 ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் இத்திருச்சபைக்கு வருகை புரிந்து, பல்வேறு வழிபாட்டு பூஜை முறைகளையும், நிர்வாக முறைகளையும் சீரமைத்து, 120 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர், பெருமாளின் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்த நிலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார். ராமானுஜர் வகுத்து தந்த ஆகமவிதிகளை பின்பற்றி, அவர் வழிவந்த பெருமாளின் அர்ச்சகர்களே ஜீயர்கள்.

மேலும், வசந்த உற்சவம், ஆதி பிரம்மோற்சவம், விஜயதசமி உள்ளிட்ட வருடத்தின் 7 நாட்கள் மட்டும், பெருமாள் தங்க குதிரைவாகனத்தில் பவனி வருவார்.

வைகுண்ட ஏகாதேசி அன்று ஆர்யபடல் வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசலின் வழியாக உலாவரும் ரங்கனாதரைக் கண்டு தரிசனம் பெற்றால், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அந்த வைகுந்த ஏகாதசி திருவிழா சமயத்தில், திருமங்கை ஆழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரம் கால் மண்டபதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும்போது, பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.

ஆனால், 951 தூண்கள் மட்டுமே உள்ளதால் ஏகாதசி நாள் அன்று கோவிலிலுள்ள மணல் வெளியில் மரத்தால் ஆன 49 தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களைக் கொண்டதாக விழா நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்மா மண்டபத்தில் இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் விமர்சையாக நடத்தப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில், பண்டைய கலாச்சார பாரம்பரியத்தை, பழமை மாறாமல் போற்றிப் பாதுகாக்கும் அமைப்புகள் பற்றி யுனெஸ்கோ ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன் முடிவில், ஆசியாவிலேயே முதல் முறையாக இத்திருத்தலத்திற்கு யுனெஸ்கோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்விருதால் ஊக்கமடைந்த கோவில் நிர்வாகிகள், எதிர்கால சந்ததியினரும் ஸ்ரீரங்கரங்கநாதர் ஆலயத்தின் அருமை, பெருமைகளை எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ‘Preserving Antiquity for Posterity’ என்ற புத்தகத்தை உருவாக்கி உள்ளனர். அதன் முதல் பிரதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் வெளியிட்டார்.

UNESCO வின் நிபுணர்களில் ஒருவரான ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி, 1936ம் ஆண்டு இக்கோவிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இத்திருக்கோவிலில் நாள் முழுவதும் நடைபெறும் வகையில் அன்னதான திட்டத்தை மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். மேலும், 17 லட்சம் ரூபாய் செலவில் வசந்தமண்டபத்திற்கு சுற்றுசுவரையும் கட்டித் தந்தார்.

இன்றைய ராசிப்பலன் 04 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை

About அருள்

Check Also

நவராத்திரி பூஜை

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Sharesஇந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜைகளை களைகட்டி வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி கொண்டாட்டத்துக்கு பிரசித்தி பெற்ற மாநிலங்களில் …