சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என மோடி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் உள்ளூர் தீவிரவாத இயக்கங்களுடன் சர்வதேச தீவிரவாத இயக்கங்களின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் மூலம் உரையாடி உள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை அதிபர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (22-04-2019) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார்.
இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதி அவர்களிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.