நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மாநாடு படம் கைவிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்றமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மகா மாநாடு என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற முப்தி(Mufti) படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டியோ கிரீன் ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். கன்னடத்தில் முப்தியை இயக்கிய நார்தனைக் கொண்டே தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்குவதற்கு ஞானவேல் ராஜா திட்டமிட்டிருந்தார். அதற்கான சூட்டிங் தொடங்கி நடைபெற்றுவந்தது. சிம்புக்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுவந்தன.
இதற்கிடையில், சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய சிம்பு நியூ லுக்கில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து முப்தி படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். இந்தப் படம் கைவிடப்பட்டது என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.