பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது. #FranceFire #NotreDameCathedral
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது.
850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.
பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் கோபுரத்தைவிட இந்த தேவாலயத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
கத்தோலிக்க மக்கள் புனித வாரத்தை கொண்டாட கடைபிடித்து வருகிற நிலையில், தேவாலயத்தின் சுவரில் ஏற்பட்டிருந்த கீறல்களை சரிசெய்ய, கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
மிகவும் ஆக்ரோஷமாக பற்றி எரிந்த தீயால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது.
இதையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கினர்.
தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீ பிழம்புகளை வேதனையுடன் பார்த்தனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் சிலர் தேவாலயத்தில் உள்ள ஏராளமான புராதன கலைப்பொருட்கள் காப்பாற்றப்பட வேண்டுமென இறை பாடல்களை பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து தெரியவந்ததும், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அங்கு மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்ட அவர் இது பற்றி கூறுகையில் “இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம்.
இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
நோட்ரே-டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தனர்.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில், “14-ம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே-டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன” என குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு தேவாலயத்தில் எரிந்த தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை.
தேவாலயத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் காரணமாக தீப்பிடித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
எனினும் உண்மையான காரணத்தை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தேவலாயத்தை புனரமைப்பதற்காக நிதி குவிய தொடங்கி உள்ளது.
பிரான்சை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மட்டும் 300 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரத்து 360 கோடி) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #FranceFire #NotreDameCathedral