யாழ். மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.
யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்களில் தீப்பற்றி எரிந்தன.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனம் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.