உத்தரபிரதேசத்தில் மகா கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியோபந்த் என்ற இடத்தில் நடந்தது.
இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், காவலாளி கோஷத்தை பா.ஜனதா கையில் எடுத்து உள்ளது.
இது வெற்று கோஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது.
ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாக அக்கறை இருந்தால் முன்பே நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி இருக்க வேண்டும்.
தற்போது பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி ஆட்சியை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவதாக கூறும் திட்டத்தால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது என்றார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கடனில் தத்தளிக்க விட மாட்டோம்.
அவர்களின் கடனை அடைப்போம். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை அளிப்போம்.
வெறுப்பு அரசியலால் பா.ஜனதா அரசு தோல்வி அடையும். அந்த இடத்தை எங்கள் கூட்டணி பிடிக்கும் என மாயாவதி பேசியுள்ளார்.