ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மும்பையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கட்சி தொடங்கும் பணிகளை ரஜினிகாந்த் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அரசியல் வேண்டாம் என அவர்களின் நண்பரும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி கூறியுள்ளார். அரசியலில் தானும், தனது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணும் தோற்றுவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்ட பெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியலில் தைரியமாக செயல்படுங்கள், காலம் கணியும் என சிரஞ்சீவி அறிவுறுத்தியுள்ளார்.
நல்ல நண்பர் என்ற முறையில் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம் என சிரஞ்சீவி கூறியுள்ளதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவது உறுதி என கூறினார்.
நவீன அரசியலில் நடிகர்கள் சாதிக்க முடியாது என்ற கூற்றை ரஜினிகாந்த் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.