தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை எம்பியாகிறார்.
இந்நிலையில், தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுகுறித்த அவரது மனுவில், ‘ எனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டவிரோதமானது.
சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தெரிந்த விஷயத்தை வைத்துச் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் எனக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எனக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வைகோ, ‘தேசத்துரோக வழக்கில் எனக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் மிக முக்கியமானது.
நான் நீதிபதியிடம் குறைந்த பட்ச தண்டனையைக் கேட்கவில்லை. அதிகபட்ச தண்டனை தாருங்கள் என்று தான் கேட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.