ஆறு வீதி விதிமீறல்களுக்காக ஆகக் குறைந்த அபராதத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வாகன போக்குவரத்து சட்டத் திருத்தங்கள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை செலுத்தும் சாரதிகளினால் இழைக்கப்படும் வீதி விதிமீறல்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட அபராதத்தை அதிகரிப்பதற்கான வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் நேற்று முன்தினம் அனுமதியளித்தது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேநேரம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறலுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு, அனுமதியளித்ததுடன், அது சட்டமாக அமுலாக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.