இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை பணியாளர் ஆகிய 3 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியார் நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த இரண்டு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.