சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வெடிப்பொருட்களுடன் தாக்குதல்தாரிகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் 250-5680 இலக்க தகட்டை கொண்ட சிற்றூர்ந்து புளியங்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்துடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மதவாச்சி – தல்கஸ்வெவ பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அநுராதப்புரம் பிரதான நீதவான் ஜானக பிரசன்ன சமரசிங்க காவற்துறைக்கு பிறப்பித்துள்ளார்.
காவற்துறை விஷேட அதிரடிப்படை மற்றும் மதவாச்சி காவற்துறையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
47 வயதான அப்துல் லத்தீப் மொஹமட் என்ற இவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளராக சில காலம் செயற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் சந்தேத்துக்குரியவர் கொழும்பிலிருந்து மதவாச்சி – தல்கஸ்வெவயில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது கைது செய்யபடபட்டதாக காவற்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியா – பட்டாணிச்சூர் பிரதேசத்தில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றின் குழாயிலிருந்து இந்த வாள்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலையடுத்து இந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதற்கிடையில், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எச்.எம்.அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை, இன்று வெலிகடை காவற்துறையினருக்கு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் இருவரும் நாவலை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களிடம் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், மடிக் கணனி என்பன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை. தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் சகோதரருடன் இணைந்து ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக கூறப்படும் சாரதி ஒருவர் இன்று காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த அவரை இன்று காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.