இலங்கையில் உள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது பிள்ளைகளை இலங்கையில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.
இதில் இலங்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை, நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் இலங்கையில் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக சுற்றுலா பிரதேசங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், அங்காடிகள், அரசாங்க ஸ்தாபனங்கள், விருந்தகங்கள், விடுதிகள், உணவகங்கள், மதஸ்தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், கல்வி நிறுவகங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா தங்களது பிரஜைகளை எச்சரித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளால், இலங்கையில் தங்கி இருக்கின்ற அமெரிக்க பிரஜைகளுக்கு வரைமுறைக்கு உட்பட்ட அளவே அவசர சேவைகளை வழங்க முடியும் என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.