இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை தாங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று தான் நம்பிக்கை கொள்வதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இதேநேரம், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காகவும், எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் தாங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தான் தயாராக உள்ளதாகவும் வட முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.