மட்டக்களப்பு – வவுணத்தீவில் வைத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காமதம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாகொடவிடம் கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த கோரிக்கையை முன்னவைத்துள்ளார்.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளி கதிர்காம தம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இதுவரை அவரை விடுதலை செய்வதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆகையினாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கடிதம் ஒன்றின் மூலம் அஜந்தனின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுணத்தீவில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான அஜந்தனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜந்தனை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு அமைய விசாரணை செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
இந்நிலையில், தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா என்றழைக்கும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை வழங்கிய தகவலையடுத்து வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கடந்த 2018 நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வாளால் வெட்டி மற்றும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரு காவல் துறை உத்தியோகத்தர்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரு துப்பாக்கிகளையும் புலனாய்வு துறையினர் மீட்டெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நிந்தவூர் மற்றும் வனாத்தவில்லு பிரதேசங்களில் மிகவும் சூட்சுமமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி இரு துப்பாக்கிகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மாவனெல்லையில் தஸ்லீம் என்பவரை இலக்குவைத்து மேற்படி சந்தேகநபர்களினாலேயே துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தனை விடுதலை செய்யவது குறித்து கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.