மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டு நேற்று முதல் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு வைத்தியசாலையின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட காவற்துறை அத்தியசட்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி காலை வரையில் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் பாதுகாப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.