வௌிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை , புர்க்கா பயன்பாட்டை தடை செய்வதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
புர்க்கா போன்ற ஆடைகளை தடை செய்ய ,புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியதையடுத்தே,பிரதமர் அலுவலகம் இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.
இதன்படி, இது போன்ற ஆடைகளை தடை செய்வதற்கு அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை யோசனையொன்றை நிறைவேற்றியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, புர்க்கா போன்ற ஆடைகளை தடை செய்யும் வகையில் நீதியமைச்சர் அதற்கான சட்டமூலத்தை தயாரித்துக் கொண்டுள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.