சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன தொடர்பில் நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய திக்வெல்ல – யோனகபுர பகுதியில் 2500 சிம் அட்டைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கோட்டை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஈயத்தினாலான 669 சிறிய பந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய காவி உடைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்முனை – பாலமுனை கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் வெடிபொருட்கள் அடங்கிய 22 பிளாஸ்ரிக் குழாய்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.
மொனராகலை – மாகந்தனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 75 டெட்டனேட்டர்கள், ஒருதொகை வோட்டர் ஜெல் உட்பட சில தோட்டக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுகஸ்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை பகுதியில் பி.எம்.டபிள்யு ரக மகிழுந்து ஒன்றிலிருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளும், சில தோட்டாக்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேநேரம், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை பரப்பும் நோக்கில் செயற்பட்டார் என்ற சந்தேகத்தில், அளுத்கம – தர்கா நகர் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய குறித்த சந்தேகத்துக்குரியவர், கைத்தொலைபேசி மற்றும் கணினி என்பனவற்றின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை வைத்திருந்திருக்கக்கூடும் எனத் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், ஜா-எல பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சேதனை நடவடிக்கையின்போது அனுமதிக்கப்பட்ட விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டுநாயக்க விமானப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நீர்கொழும்பில் மேற்கொண்ட சோதனையின்போது சந்தேகத்துக்குரிய 30 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீர்கொழும்பு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களுடன் கொழும்பு – கொட்டாஞ்சேனையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய இரண்டு பேரையும் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதேநேரம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் அடங்கிய இறுவட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட துறைமுக அதிகார சபையின் ஊழியர் ஒருவரை 30 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லோசனி அபேவிக்ரமவினால், கடலோர காவல்துறையினருக்கு நேற்று இந்த அனுமதி வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்து சந்தேகத்துக்குரியவர் 10 இலட்சம் ரூபா காசோலையை தம்வசம் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.