தற்போதைய சந்தர்ப்பத்தில் தம்மால் இயலுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தருணத்தில் இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், தாக்குதல் சம்பவங்களில் பலியான அனைத்து குடும்பங்களினதும் உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசேப் தயிப் எர்டோகான ஆகியோரும் நேற்று ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, தமது கவலையை தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்டார் அதிபர் சேக் தமிம் பின் அஹமட் அல்தானி ஆகியோரும் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தங்களது கவலையை தெரிவித்ததுடன், இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் இலங்கையுடன் கைக்கோர்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.